Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளைகிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் :

வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் பொதுமக்கள் அதிகம் வந்து சென்றிருப்பதால், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்டன. ஏராளமானோர் வாக்களிப்பதற்காக வந்து சென்ற நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயச்சந்திரன் கூறியதாவது: வாக்காளிக்க வந்தவர்களின் உடல் வெப்பத்தைப் பரிசோதித்த பின்னரே, அவர்களை வாக்குச்சாவடி மையக் கட்டிடத்தின் உள்ளே செல்ல அனுமதித்தனர். எனினும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு, நோய்த் தொற்று அறிகுறிகள் தெரிவதில்லை என சுகாதாரத் துறையும் தெரிவித்துள்ளது. எனவே, ஏராளமானோர் வந்துசென்ற வாக்குச்சாவடி மைய பள்ளிக் கட்டிட வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட தூய்மைப்பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட வேண்டும்" என்றார்.

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரியாராஜ் கூறும்போது, "கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, வாக்களிக்க வந்தவர்களுக்கு பிளாஸ்டிக் கையுறை வழங்கப்பட்டது. வாக்களித்த பின்னர், அவற்றை பிரத்யேக குப்பைத் தொட்டியில் போட்டுச்சென்றனர். அவற்றை சேகரித்து, பாதுகாப்பாக அகற்றியுள்ளோம். வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட அனைத்துக் கட்டிடங்ளையும் தூய்மைப் படுத்த வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் தூய்மைப் பணிகள் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x