

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றுநடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சராசரியாக 69.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 13,13,714பேரில் 71.98 சதவீதம் பேர்வாக்களித்துள்ளனர். இந்த மாவட்டத்தில் காஞ்சிபுரம் தொகுதியில் 3,09,117 வாக்காளர்களும், உத்திரமேரூர் தொகுதியில் 2,60,367 வாக்காளர்களும், ஆலந்தூர் தொகுதியில் 3,89,032 வாக்காளர்களும், பெரும்புதூர் தொகுதியில் 3,55,198 வாக்காளர்களும் உள்ளனர்.
நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் 60.85 சதவீத வாக்குகளும், காஞ்சிபுரம் தொகுதியில் 72.96 சதவீத வாக்குகளும், பெரும்புதூர் தொகுதியில் 74.03 சதவீத வாக்குகளும், உத்திரமேரூர் தொகுதியில் 80.09 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 68.07 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் சோழிங்கநல்லூர் தொகுதியில் 57.86 சதவீத வாக்குகளும், பல்லாவரம் தொகுதியில் 60.08 சதவீத வாக்குகளும், தாம்பரம் தொகுதியில் 59.3 சதவீத வாக்குகளும், செங்கல்பட்டு தொகுதியில் 63.5 சதவீத வாக்குகளும், திருப்போரூர் தொகுதியில் 76.74 சதவீத வாக்குகளும், செய்யூர் தொகுதியில் 78.16 சதவீத வாக்குகளும், மதுராந்தகம் தொகுதியில் 80.91 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. வயதானவர்கள் பலர்ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். முதல் தலைமுறை வாக்காளர்களும், கல்லூரி மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சராசரியாக 69.30சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் 10 தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 35 லட்சத்து 11 ஆயிரத்து 557 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் 77.93 சதவீதம், பொன்னேரியில் 77.36 சதவீதம், திருத்தணியில் 79 சதவீதம்,திருவள்ளூரில் 75.7 சதவீதம், பூந்தமல்லியில் 73 சதவீதம், ஆவடியில் 68 சதவீதம், மதுரவாயலில் 59.2 சதவீதம், அம்பத்தூரில் 61.9 சதவீதம், மாதவரத்தில் 66.7 சதவீதம், திருவொற்றியூரில் 65 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளன.
மேலும், மாலை 6 மணி முதல், இரவு 7 மணி வரை, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 70 பேரில், 58 பேர் பாதுகாப்பு உடையோடு வந்து வாக்களித்தனர்.