Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

பேரவைத் தேர்தல் முடிந்த ஏப்.6-ம் தேதி வரை - ரூ.446.28 கோடி மதிப்பு ரொக்கம், பொருட்கள் பறிமுதல் : தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அறிவிப்பு கடந்த பிப்.26-ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அப்போதிலிருந்தே, சட்டவிரோத பணப்பரிமாற்றம் கண்காணிக்கப்பட்டதுடன், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் அடங்கிய பறக்கும்படையினர், நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டன. தொகுதிகளின் எல்லைகளில் சோதனைச்சாவடிகளும் அமைத்து கண்காணிக்கப்பட்டன. வருமானவரித் துறையினரும் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் அடிக்கடி சோதனைகள் நடத்தினர்.

இதன்மூலம், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் காலத்தில் பிடிபட்ட ரொக்கம் மற்றும் பொருட்களை விடபல மடங்கு இந்த தேர்தலில் பிடிபட்டுள்ளது. குறிப்பாக பிப்.26-ம் தேதி முதல், தேர்தல் நாளான நேற்று முன்தினம் ஏப்ரல் 6-ம் தேதி வரை பறக்கும்படையினர், நிலை கண்காணிப்புக்குழுக்கள் ரூ.161.84 கோடி, வருமான வரித்துறையினர் ரூ.74.86 கோடி என ரூ.236.70 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இவ்வாறு பிடிபடும் பணத்தில் உரிய ஆவணங்கள் அளிக்கப்படும் நிலையில், அந்த ரொக்கப்பணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, தமிழகம் முழுவதும் ரூ.5.27 கோடி மதிப்புள்ள 2 லட்சத்து 90,284 லிட்டர் மதுபானம், ரூ.2 .20 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், ரூ.4 லட்சம் மதிப்புள்ள வைரம், ரூ.173.19 காடி மதிப்புள்ள 522 கிலோ தங்கம், ரூ.3.17 கோடி மதிப்புள்ள 731 கிலோ வெள்ளி, ரூ.7 லட்சம் மதிப்புள்ள 860 கிலோ இதர உலோகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுதவிர, ரூ.1.95 கோடி மதிப்பிலான சேலைகள், இதர துணிவகைகள் என ரூ.23.14 கோடி மதிப்பிலான லேப்டாப்கள், குக்கர்கள் உள்ளிட்ட இலவச பொருட்கள், ரூ.35 லட்சம் மதிப்பு வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்கள் என ரூ.446.26 கோடி மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முந்தையநாளான ஏப்ரல் 5-ம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.445.81 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகவல்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x