Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

கர்நாடக அரசுப் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி பென்னாகரம் வந்து வாக்களித்த வாக்காளர்கள் :

கர்நாடக மாநிலத்தில் வேலை வாய்ப்புக்காக தங்கியிருக்கும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள், அம்மாநில அரசுப் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி வந்து வாக்களித்துச் சென்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப் பேரவை தொகுதி வறட்சி மிகுந்த பகுதி. இங்கு போதிய நில வளம் இருந்தபோதும் நீர்வளம் இல்லை. வானம் பார்த்த பூமியில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இங்குள்ளவர்களால் குடும்ப செலவுகளை சமாளிக்க முடிவதில்லை. எனவே, வேலை வாய்ப்பை தேடி கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு போன்ற இடங்களுக்கு செல்லும் பென்னாகரம் தொகுதி மக்கள் அங்கேயே தங்கி விடுகின்றனர். கேரள, ஆந்திர மாநிலங்களிலும் இதுபோன்று வேலை வாய்ப்புக்காக சென்று தங்கி விட்டவர்களும் உண்டு. இருப்பினும், கர்நாடக மாநிலத்தில் பென்னாகரம் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். அவர்களில் பலரும் ஒவ்வொரு சட்டப் பேரவை, மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களின்போதும் சொந்த ஊர்களுக்கு வந்து வாக்களித்துச் செல்கின்றனர். இவ்வாறு வரும் வாக்காளர்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக கர்நாடக மாநில அரசுப் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். ஒவ்வொரு குழுவும் ஒரு பேருந்தை அமர்த்தி அதில் பயணித்து வந்து வாக்களித்துச் செல்கின்றனர்.

நேற்று நடந்த தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வாக்களிக்கவும் இவ்வாறு கர்நாடக மாநில அரசுப் பேருந்துகள் மூலம் பென்னாகரம் தொகுதிக்கு வாக்காளர்கள் வந்திருந்தனர்.

இவ்வாறு வந்திருந்த வாக்காளர்கள் சிலர் கூறுகையில், ‘கர்நாடக மாநிலத்தில் இருந்து 11 பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி வாக்களிப்பதற்காக சொந்த கிராமங்களுக்கு வந்தோம். பேருந்துகள் மாறி, மாறி ஊருக்குவந்து செல்வது நேர விரயத்தையும், அலைச்சலையும் ஏற்படுத்தி விடுகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x