Published : 07 Apr 2021 03:18 am

Updated : 07 Apr 2021 03:18 am

 

Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

திமுக நிர்வாகியை அமைச்சர் வீரமணி கண்டித்ததால் - அதிமுக - திமுக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு :

ஜோலார்பேட்டை

ஏலகிரி கிராமத்தில் வாக்குச்சாவடி மையத்துக்குள் சென்ற திமுக நிர்வாகியை அமைச்சர் கே.சி.வீரமணி கண்டித்ததால், அதிமுக – திமுக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகு திக்கு உட்பட்ட ஏலகிரி கிராமத்தில் ஆதிதிராவிடர் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக் கப்பட்டிருந்தது.


காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. நேற்று மாலை வாக்குப்பதிவு இறுதிக்கட்டத்தை எட்டியபோது, அதேபகுதியைச் சேர்ந்த திமுக ஊராட்சி செயலாளர் சசிகுமார் (45) என்பவர் வாக்குச் சாவடி மையத்துக்குள் சென்று அங்கு வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.

அமைச்சரிடம் வாக்குவாதம்

அப்போது, அமைச்சர் கே.சி.வீரமணி அந்த வாக்குச்சாவடியில் பதிவாகும் வாக்குப்பதிவை பார்வையிட வந்தார். அங்கு, திமுக பிரமுகர் வாக்குச்சாவடி மையத்துக்குள் வாக்கு சேகரித் ததை கண்ட அமைச்சர் கே.சி.வீரமணி, திமுக பிரமுகர் சசிகுமாரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார்.

அப்போது, அமைச்சருக்கும் திமுக பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே, அங்கு வந்த அதிமுக – திமுக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

பின்னர், அமைச்சர் கே.சி.வீரமணியை, திமுக நிர்வாகிகள் சூழ்ந்துக்கொண்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினர், காவல் துறையினர் அமைச்சர் கே.சி.வீரமணியை அங்கிருந்து வெளியேற செய்தனர்.

பிறகு, இரு கட்சியினரிடம் சமரசம் பேசிய காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x