

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் பழுது, குறைபாடு கண்டறியப்பட்டால், உடனடியாக மாற்றுவதற்கு ஏதுவாக, 23 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் ம.கோவிந்தராவ் தெரிவித் தார்.
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலி ருந்து வாக்குச்சாவடிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுவதைப் பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று(ஏப்.6) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி வழங்கப்பட்டு, சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 204 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனி கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள 2,886 வாக்குச்சாவடிகளில் 102 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 3,438 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,755 விவிபாட் இயந்திரங்களும் தயார்நிலையில் உள்ளன. இவற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலோ, குறைபாடுகள் தெரிந்தாலோ உடனடியாக மாற்ற ஏதுவாக மேலும் 23 சதவீத எண்ணிக்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்களும், 33 சதவீத எண்ணிக்கையில் விவிபாட் இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தொகுதிக்கு தலா 2 பொறியாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்றார்.