Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM

வேலூர் மாவட்டத்தில் உள்ள - 5 சட்டப்பேரவை தொகுதிகளில் : 12.71 லட்சம் வாக்காளர்கள் : காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவது தொடர்பாக, வேலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம்.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 70 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதற்காக, 1,783 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டு 12 லட்சத்து 71 ஆயிரத்து 132 வாக்காளர்கள் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை வாக்களிக்க உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்-6) காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,783 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்பாடி தொகுதியில் 349, வேலூரில் 364, அணைக்கட்டில் 351, கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 311, குடியாத்தம் (தனி) தொகுதியில் 408 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, தொங்குமலை, அல்லேரி, ஜார்தான் கொல்லை, பலாம்பட்டு, அத்தியூர் உள்ளிட்ட மலைப்பகுதியில் உள்ள 12 வாக்குச்சாவடிகளுக்கான பிரத்யேக மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று மாலை கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 6,16,028 ஆண்கள், 6,54,960 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 144 பேர் என மொத்தம் 12 லட்சத்து 71 ஆயிரத்து 132 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

வேலூர் மாவட்டத்தில் 197 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தப்பட்டு ஆட்சியர்அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள் ளனர். அத்துடன் பிரச்சினைக்குரிய 1,131 வாக்குச்சாவடிகளில் அடையாளம் காணப்பட்டு இங்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்க உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 89 ஆயிரத்து 413 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தகவல் சீட்டுகள் இல்லாமல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 2,569 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,116 கட்டுப்பாட்டு கருவிகள், 2,244 விவிபாட் கருவிகள் 5 தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர்.

தபால் வாக்குகள்

வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10,362 பேரில்இதுவரை 4,940 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அதேபோல், ஒரே சட்டப் பேரவைத் தொகுதியில் பணியாற்றும் 1.772 அலுவலர்கள் தேர்தல் பணிச்சான்று அளிக்கப்பட்டு அவர்களது வாக்குச்சாவடியிலே தங்களது வாக்குகளை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடியில் 15 பேர், வேலூரில் 17 பேர், கே.வி.குப்பத்தில் 10 பேர், குடியாத்தத்தில் 15 பேர், அணைக்கட்டில் 13 பேர் என மொத்தம் 70 பேர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர்.

கரோனா தடுப்பு

1,783 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வெப்ப நிலையை பரிசோதிக்கவும், சானிடைசர் வழங்கவும் 3,566 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் அதிகம் இருப்பவர்கள் மாலை 6 மணிக்குப் பிறகு வந்து தனியாக வாக்களிக்கலாம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சேரும் மருத்துவக் கழிவுகளை அகற்ற 149 குழுக்கள் மற்றும் பிரத்யேக வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோவிட் தடுப்பூசி

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 92,093 பேர் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 7 கம்பெனி துணை ராணுவப்படையினர், 470 சிறப்பு காவல் படையினர், 733 காவலர்கள், காவல் அல்லாத 1,050 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 749 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x