தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் - சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுவில் முரண்பாடு : மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில்  -  சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுவில் முரண்பாடு  :  மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்
Updated on
1 min read

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் இருவரின் வேட்புமனுவில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களில் முரண்பாடு இருப்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் ஆணையருக்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் அணைப்பாளையம் கோம்பைக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவரும், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான திமுக தலைமை முகவருமான டி.சிவக்குமார் நேற்று அனுப்பியுள்ள புகார் மனு விவரம்:

தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதியின் திமுக வேட்பாளர் நா.கயல்விழியின் தலைமை முகவராக உள்ளேன். திமுக வேட்பாளரின் பெயர், சின்னத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கயல்விழி என்ற பெயருடைய இருவரை அதிமுக மற்றும் பாஜகவினர் சுயேச்சை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. அவ்வாறு சுயேச்சைகளாக கயல்விழி என்ற பெயரில் நிறுத்தப்பட்டுள்ள இருவரில் ஒருவர் பெயர் பெ.கயல்விழி, மற்றொருவர் பெயர் கு.கயல்விழி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரது வேட்புமனுக்களிலும் ஒரே அலைபேசி எண்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், கு.கயல்விழிக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம் பேனா. இது பேனா போன்ற தோற்றத்தில் இல்லாமல், மாறுபட்ட வகையில் பேனாவை சுற்றிலும் கதிர்கள் இருப்பதுபோல உள்ளது. இதை திடீரென பார்த்தால் உதயசூரியன் சின்னம்போல தோற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. வாக்காளர்கள் மத்தியில் சின்னம் குறித்து குழப்பத்தை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளன. இப்பிரச்சினையில், சுயேச்சை வேட்பாளர்களாகிய மேற்குறிப்பிட்ட இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேனா சின்னம் வடிவத்தை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in