

சேலத்தில் பெண்ணை கட்டிப் போட்டு ஆறு பவுன் தங்க நகை, ரூ.4 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் சின்னதிருப்பதி, சேரன் தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா (55). நேற்று முன்தினம் இவரது மகளும், மருமகனும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் மல்லிகா ஒன்றரை வயது பேரனுடன் இருந்துள்ளார். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து, மல்லிகாவை மிரட்டி, கட்டிப்போட்டுள்ளனர். வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.4 ஆயிரத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பி சென்றது.
இதுதொடர்பாக கன்னங் குறிச்சி காவல் நிலையத்தில் மல்லிகா புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கொண்டு, மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.