Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விளையாட்டு, தொழில்வளம் என - அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த தொகுதியாக்குவேன் : திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் வாக்குறுதி

கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, விளையாட்டு, தொழில்வளம் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவேன் என திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

10 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தபோது திருச்சிக்கு எண் ணற்ற திட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். எனவே, மக்களிடம் வரவேற்பு இருப்பதால் வெற்றி உறுதியாகிவிட்டது. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விளையாட்டு, தொழில்வளம் என அனைத்து துறைகளிலும் வளர்ச் சியடைந்ததாக இத்தொகுதியை மாற்றுவதே என் இலக்கு.

50 ஆண்டுகால கனவு சாலை

எம்.பி.யாக இல்லாதபோதும் கூட, அமைச்சர்களிடம் பேசி பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். பொன் மலையிலிருந்து கிழக்குறிச்சி, சோழமாதேவி, நவல்பட்டு வரை ரூ.7.40 கோடி செலவில் 7.10 கி.மீ இணைப்பு சாலை பெற்றுக் கொடுத்துள்ளேன். 50 ஆண்டு கால இந்த கனவு சாலைக்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதேபோல, மேலும் பல சாலைப் பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன.

ரூ.450 கோடியில் பறக்கும் பாலம்

பால்பண்ணையிலிருந்து துவாக்குடி வரை ரூ.450 கோடியில் பறக்கும் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரியமங்கலம் கிடங்கிலுள்ள குப்பையை அகற்றி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படும். மாவடிக்குளத்தில் என் முயற்சியால் ரூ.2.59 கோடியில் சீரமைக்கப்பட்டு, நடைபாதை, பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவேன்

தமிழக அரசின் மின் திட்ட பணிகளை பெல் நிறுவனத்துக்கே பெற்றுத்தந்து, சிறு, குறு நிறு வனங்களின் வளர்ச்சிக்கு துணை நிற்பேன். புதிய தொழில் நிறுவனங்களைக் கொண்டு வர முயற்சிப்பேன். ஐ.டி.பார்க் ரூ.42 கோடி செலவில் விரிவாக்கப்படுகிறது. கூடுதல் கட்டமைப்பை ஏற்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு வந்து இத்தொகுதியினருக்கான வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துவேன்.

ஜல்லிக்கட்டு, விளையாட்டு மைதானம்

33 கிராமங்களில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தருவதுடன், அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்வேன். கிராமம்தோறும் விளையாட்டு மைதானம் அமைத்து தருவேன். சர்வதேச அளவில் கபடி போட்டி நடத்த மைதானத்தை உருவாக்குவேன். தொகுதியில் வீடில்லாத அனைவருக்கும் கான் கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x