

திருப்பூரில் தங்களது நூல் வர்த்தக அலுவலகங்களை திறக்க ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த நூற்பாலைகள் சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ‘சிட்டி’ அமைப்பு சார்பில் ஆந்திரா, தெலங்கானா நூற்பாலை சங்க பிரதிநிதிகளுடன், இணையம் வழியாக சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல், ‘சிட்டி’ தலைவர் ராஜ்குமார், நூற்பாலை சங்கத் தலைவர்கள் பிரசாத் (ஆந்திரா), அகர்வால் (தெலங்கானா), ‘டெக்ஸ்புரோசில்’ தலைவர் மனோஜ்குமார் பட்டோடியா உட்பட பல்வேறு தொழில் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் ஏ.இ.பி.சி. அகில இந்திய தலைவர் சக்திவேல் கூறும்போது, "நூல் விலை உயர்வால் திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தவிக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா நுாற்பாலை சங்க பிரதி நிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கையை ஏற்று, திருப்பூரில் தங்கள் மாநில நூல் வர்த்தக அலுவலகங்களை திறக்க சம்மதித்துள்ளனர். இதற்கு தேவையான வசதிகளை ஏ.இ.பி.சி. செய்து கொடுக்கும்.
ஆடை உற்பத்தி துறையினர், நூற்பாலை துறையினர் வசதிக்காக போர்ட்டல் சேவை மையம்செயல்படுத்தப்படும். வெளி மாநில நூற்பாலைகளின் வர்த்தக மையங்கள் அமைந்தால், திருப்பூர் நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி நூல் கிடைக்கும். தமிழகத்தில் இம்மாதம் நூல் விலை உயர்வு இல்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கிலோவுக்கு ரூ.15 விலை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். திருப்பூர் பின்னலாடைத் துறையால்தான், தமிழகநூற்பாலைகள் வளர்ச்சியடைந்துள்ளன.
எனவே, உள்ளூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி நூல் வழங்க வேண்டும்" என்றார்.