

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் ‘சிவிஜில்’ செயலி குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்த பின் கூறியதாவது: ‘சிவிஜில்’ செயலியை பொதுமக்கள் அனைவரும்பதிவிறக்கம் செய்து, தேர்தல்விதிமீறல் இருப்பின், அதனைபுகைபடமாகவோ, வீடியோவாகவோ எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் விதிமீறல்களானபணம் பட்டுவாடா, மது, போதைப் பொருட்கள் விநியோகம்,துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் காட்டி மிரட்டுதல், பரிசு விநியோகம், உண்மைக்கு மாறான செய்திகள், வேட்பாளர்களின் விளம்பரத் தொகுப்புகள், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் மற்றும் மதவாத கருத்துகள் குறித்ததகவல்களை அந்தந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள், ‘சிவிஜில்’ செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன், சார்-ஆட்சியர் மோனிகா ரானா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயசந்திரன் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.