வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு; 4 பேர் காயம் :
பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் மதுரைவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கயல்விழி. இவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணி மேற்கொண்டு வந்தார். இப்பணியில் நேற்று கட்டுமானப் பணியாளர்கள் 6 பேர் ஈடுபட்டிருந்தனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது 6 அடி உயர சுவர் பாரம் தாங்காமல் திடீரென இடிந்து விழுந்தது.
இதில், கட்டுமான பணி யாளர்கள் 6 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பரமத்தி வேலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், கட்டிட மேஸ்திரி மாதேஸ்வரன் (50), சித்தாள் அஞ்சலையம்மாள் (65) ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது தெரிந்தது. மற்ற 4 பேர்களில் 2 பேர் அரசு மருத்துவமனையிலும் 2 பேர் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள் ளனர்.
இதுதொடர்பாக பரமத்தி வேலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
