

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்றுசட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவற்றை பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. உதகை பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உதகை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளர் விவரம் பொருத்தும் பணியை ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “குன்னூர் தொகுதிக்கு பிராவிடன்ஸ் கல்லூரியிலும், கூடலூர் தொகுதிக்கு செயின்ட் தாமஸ் பள்ளியிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களை பொருத்தும் பணி நடைபெறுகிறது. இன்று இரவுக்குள் இப்பணிகளை முடித்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படும்.
உதகை தொகுதியில் 308, கூடலூர் தொகுதியில் 280, குன்னூர் தொகுதியில் 280 என மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 112 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்கள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
யானைகள் நடமாட்டம் உள்ளபகுதிகளிலிருந்து வாக்காளர்களை அழைத்து வர மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்துவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அல்லிமாயார், ஜெ.கொலக்கொம்பை, குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதற்கு ஏதுவாக போக்குவரத்துத் துறைசார்பில் பேருந்து வசதி செய்யப்படும். முதுமலை உள்ளிட்ட அடர்ந்த வனப் பகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக காவல் துறை, வனத் துறை அலுவலர்கள் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.