Published : 31 Mar 2021 03:16 AM
Last Updated : 31 Mar 2021 03:16 AM

திருவள்ளூரில் அனல் பறக்கும் பிரச்சாரம் : அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக வேட்பாளர்கள் வாக்குறுதி

திருவள்ளூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்கள், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தொகுதியில் அதிமுக சார்பில் பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், அமமுக சார்பில் என்.குரு, நாம் தமிழர் கட்சி சார்பில் பெ.பசுபதி, பகுஜன் சமாஜ் சார்பில் டி.தாஸ் மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர். திருவள்ளூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருவள்ளூர் நகராட்சிப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவர், ``திருவள்ளூரில் அரசு, கலை அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படும். திருவள்ளூர் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரிவாக்கம் செய்யவும், திருவாலங்காட்டில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், திருவாலங்காடு, பூண்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவர், ``திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சாலை வசதி, பள்ளிக் கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து இத்தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்" என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார். மேலும், திருவள்ளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புறவழிச்சாலை, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை, இருளர் இன மக்களுக்கு தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்.

தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெ.பசுபதி, "தரமான மருத்துவமனை அமைக்கப்படும். சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகள், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மக்களுக்கு தடையின்றி மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வாக்குறுதி அளித்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல, அமமுக வேட்பாளர் என்.குரு, பகுஜன் சமாஜ் வேட்பாளர் டி. தாஸ் ஆகியோரும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, திருவள்ளூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x