Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக - கரூர், பெரம்பலூர், புதுகை மாவட்டங்களில் ரூ.15.79 லட்சம் பறிமுதல் :

கரூர்/பெரம்பலூர்/புதுக்கோட்டை

கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உரிய ஆவணங் களில் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.15 லட்சத்துக்கு 79 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் தொகுதி நிலையான கண்காணிப்புக்குழுவினர், பள்ளாபாளையத்தில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே காரில் வந்த, கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ராம்குமார், அரக்கோணத்தை சேர்ந்த பிரபு ஆகியோர் வைத்திருந்த ரூ.3,65,500 பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி பறக்கும் படை குழுவினர் கடவூர்- தரகம்பட்டி சாலையில் குஜிலியம்பாறை பிரிவில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற காரை சோதனையிட்டதில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருங்குளத்தைச் சேர்ந்த கோமல் சாலமோன்ராஜா உள்ளிட்ட 3 பேர் வைத்திருந்த ரூ.7.61 லட்சம் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பில்லாங்குளம் அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மாமனந்தல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த விஜயன் (37) என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.2 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் பறக்கும்படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆற்றங் கரை பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜபார் மகன் அலாவுதீன்(28) ஓட்டி வந்த காரில் உரிய ஆவணங் களின்றி இருந்த ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, இதே குழுவினர், ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலத்தில் வாகன சோதனை செய்தபோது, கறம்பக்குடி வட்டம் கருக்காகுறிச்சியைச் சேர்ந்த பாக்கியநாதன் மகன் பிரேம்(34) ஓட்டி வந்த, அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை யின் மாவட்டச் செயலாளர் கருப்பையாவுக்கு சொந்தமான காரில் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x