

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி ஏப்.4 முதல் ஏப்.6-ம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதியும் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள், மன மகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களை மூடுவதுடன், மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, விடுமுறை நாட்களில் மதுபானங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அவிநாசி மது விலக்கு காவல் ஆய்வாளர் முரளி, உதவி ஆய்வாளர் சர்வேஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர், அவிநாசியை அடுத்த பழங்கரை ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதி, சேவூர் போத்தம்பாளையம் தாளக்கரை கோயில் அருகே உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், ஒவ்வொரு பகுதிகளில் தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் அட்டை பெட்டியுடன் வந்த பெண் உட்பட இருவரை பிடித்து விசாரித்ததில், ஈரோடு மாவட்டம் எம்மாம்பூண்டி ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னரசு (எ) ரங்கசாமி (33), சேவூர் அருகே மங்கரசுவலையபாளையம் பகுதியைச் சேர்ந்த லூர்துசாமி மனைவி செல்வி (40) ஆகியோர் என்பது தெரியவந்தது.
தேர்தல் நாளில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வதற்காக, மது பாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிந்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 96 மதுபான பாட்டில்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.