Published : 30 Mar 2021 03:16 AM
Last Updated : 30 Mar 2021 03:16 AM
தேர்தலுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவு செலவு செய்யும் தொகுதியாக விராலி மலை, திருமயம் ஆகிய தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் மொத்தம் 112 பேர் போட்டியிடுகின்றனர்.கந்தர் வக்கோட்டை, ஆலங்குடி ஆகிய தொகுதி வாக்குச்சாவடியில் தலா ஒரு வாக்குப்பதிவு இயந்திரமும் மற்ற தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் நேற்று சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பணியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பி.உமாமகேஸ்வரி கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 57 பறக்கும்படை குழுவினர், 57 நிலையான கண்காணிப்புக் குழுவினர் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் தீவிர கண் காணிப்பு மேற்கொள்ள வேண்டிய முக்கியமான இடங்கள் என வருவாய் துறை மற்றும் காவல் துறையினரால் 72 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கான ஆணை வெளியிடப் பட்டுள்ளது. கண்காணிப்பு அலுவலர்கள் அரைமணி நேரத் துக்கு மேல் ஒரேஇடத்தில் நிற்காமல், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட கண்காணிப்பு இடங்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பறக்கும் படை யினர் மூலம் இதுவரை ரூ.9 கோடி மதிப்பிலான பணம், நகை, வெடி மருந்துகள், தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் இதரப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்க ளின்றி பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் உள்ளிட்டவை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகு சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் உரிய விசாரணை மேற்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்படும் பணம், நகை உள்ளிட்ட விவரங்கள் குறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை திருமயம் மற்றும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிகள் அதிக செலவு செய்யக்கூடியவையாக கண்டறியப்பட்டுள்ளன. இத்தொகுதிகளில் கூடுதலாக நிலையான கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழு, பறக்கும்படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் மட்டுமில்லாது மாவட்டத்தின் உட்பகுதியி லும் 36 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT