

நீலகிரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மசினகுடி ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளி, மாயார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கார்குடி அரசு உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டு, வாக்காளர்கள் அதிகமாக உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நாளன்று தற்காலிகக் கூடாரம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, வாக்குச் சாவடி மையங்களில் சாய்வு தளம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது. பாதுகாப்பு வசதிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளஆலோசனை வழங்கப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, கூடலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமார் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கொடி அணிவகுப்பு
உதகை அசெம்பிளி திரையரங்கம் அருகே தொடங்கி, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எல்க் ஹில், பாம்பே கேசில் ஆகிய பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. 90 துணை ராணுவப் படை வீரர்கள், 150 மாநகர ஆயுதப்படைக் காவலர்கள், 100 உள்ளூர் போலீஸார் என 300-க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.