

தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்டாயம் முககவசம், சமூக இடை வெளி பின்பற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெய சந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடை முறையில் உள்ளன. எனவே, பேரணிகள், பிரச்சாரங்கள் உள்ளிட்டவை கட்டாயம் முன் அனுமதி பெற்று நடத்த வேண்டும். கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோர் தேர்தல் பரப்புரை, பொதுக்கூட்டங்கள், வாக்குசேகரிப்பு, பேரணிகள் மற்றும் பிரச்சரங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசு பொது சொத்துக்கள், இயற்கை வளங்கள் மீது தேர்தல் அரசியல் கட்சிகள் விளம்பரங்கள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், உரிய ஆவணங்கள் இன்றி ரொக்க பணம், தீப்பற்றக் கூடிய பொருட்கள், தீங்கு விளைவிக்கும் மற்றும் கூர்மை முனை கொண்ட ஆயுதங்கள் பொதுமக்கள் அச்சம் கொள்ளும் வகையில் எடுத்துச் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும் வருகிற மே மாதம் 4-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பாகவும், அமைதியாகவும் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேற்கண்ட உத்தரவுகளை மீறும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188-ன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.