

சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர். சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 2,60,372 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 381 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட சம்பவங்களின் அடிப்படையிலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆலோசனை அடிப்படையிலும் 13 பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள 19 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என காவல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக காவல் துறை அலுவலர்கள் மற்றும் வேட்பாளருடன் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணைய ருமான ரவிச்சந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வாக்குப்பதிவு நாட்களில் மேற்கொள்ளப்பட கூடிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தனர்.
கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர் வள்ளிதேவி, தேர்தல் துணை வட்டாட்சியர் ஜாஸ்மின் பெனாசிர் மற்றும் அனைத்து வேட்பாளர்களின் முதன்மை பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.