

சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்குப்பதிவு செய்யும் பணி வரும் 31-ம் தேதி தொடங்குகிறது,’ என மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட 675 பேரும், மாற்றுத்திறனாளிகள் 112 பேரும் என 787 பேர் தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து வாக்குகளை சேகரிக்க 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவில் தலா ஒரு வாக்குச்சாவடி அலுவலர், காவல் துறை அலுவலர், நுண் பார்வையாளர், வீடியோ ஒளிப்பதிவாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் இடம் பெறுவர். தபால் வாக்கு சேகரிப்பு பணி வீடியோ பதிவு செய்யப்படும். இப்பணி மார்ச் 31-ம் தேதி தொடங்குகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பட்டியல் பொருத்தும் பணி நாளை,நாளை மறுநாள் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.