

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 2,298 வாக்குச்சாவடி மையங் களுக்கும் கரோனா நோய் தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வளாகத்தில், 6 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 2,298 வாக்குச்சாவடி மையங்களுக்கு கரோனா நோய்தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார்.
அப்போது ஆட்சியர் கூறியதாவது: 6 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 2,298 வாக்குச்சாவடி மையங்களில் 15,98,865 வாக்காளர்கள், வாக்குச்சாவடி தலைமை நிலைய அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் (நிலை-1, நிலை-2 மற்றும் நிலை-3), முகவர்கள் ஆகியோர் பாதுகாப்புடன் வாக்களிப்பதையும், பணியாற்றுவதையும் உறுதி செய்யும் வகையில் தெர்மா ஸ்கேனர், முகக் கவசங்கள், கிருமி நாசினி, கையுறை, பாதுகாப்பு கவச உடை உட்பட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி 2,298 வாக்குச்சாவடி மையங்களுக்கு மொத்தம் 2,298 தெர்மா ஸ்கேனர், 13,788 (500 மிலி) மற்றும் 22,980 (100 மிலி) கிருமி நாசினிகள், 22,980 முகக் கவசங்கள், 1,37,880 மூன்றடுக்கு முகக்கவசங்கள், 57,450 ஓரடுக்கு முகக்கவசங்கள், 68,940 கையுறைகள், 11,490 எல்டிபிஇ பேக்கேஜ், 2,298 டி கட் பேக், 15,98,865 பாலிதீன் கையுறைகள், 27,576 பிபிஇ உபகரணங்கள் தனித்தனியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், அலுவலர்கள், பணியாளர்கள், முகவர்கள் என அனைவரும் வரும் சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலை பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.