

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறக்கும்படையினர் இதுவரை ரூ.60 லட்சத்து 2 ஆயிரத்து 10 பணம் பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் வழங்குவதை தடுக்கும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பறக்கும் படை அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
பிப். 27-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பறக்கும் படையினர் ரூ.60 லட்சத்து 2 ஆயிரத்து 910 பணம் பறிமுதல் செய்தனர்.
இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு இது வரை ரூ.44 லட்சத்து 85 ஆயிரத்து 990 விடுவித்துள்ளனர். ரூ.15 லட்சத்து 16 ஆயிரத்து 920 தொகை விசாரணையில் உள்ளது.
இதேபோல் தளி சட்டப்பேரவை தொகுதியில் 9.139 கிலோ வெள்ளி பொருட்களும், கிருஷ்ணகிரி தொகுதியில் ரூ.47 ஆயிரத்து 535 மதிப்பில் ஜவுளித் துணிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.