குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலை : தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் அவதி

குண்டும், குழியுமாக காணப்படும் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலை.     படம்: எஸ்.கே.ரமேஷ்
குண்டும், குழியுமாக காணப்படும் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலை. படம்: எஸ்.கே.ரமேஷ்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை செல்லும் சாலை பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளதால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல் பிரமுகர்கள் இந்த சாலையில் அவதியுடன் பயணம் மேற்கொள்கின்றனர்.

கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகள் வழியே செல்கிறது. கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் நீண்ட தூரம் செல்லும் வாகன ஓட்டிகளில் பலர் மாற்றுச் சாலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இச்சாலை விரிவாக்க பணிகள் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுவருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக, இச்சாலை வழியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அவதியுடன் சென்று பொதுமக்களிடம் வாக்குகளைச் சேகரிக்கின்றனர். ஒரு சிலர் இந்த சாலையைத் தவிர்த்து மாற்று வழியில் சென்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லக்குமார் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை சாலை விரி வாக்கப் பணிக்காக கடந்த 2019-ம் நவம்பர் மாதம் ரூ.434 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. முதல்கட்டமாக கிருஷ்ணகிரியில் வரும் 31-ம் தேதிக்குள் ரூ.80 கோடிக்கு சாலை விரிவாக்கப் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது வரை ரூ.42 கோடிக்கு பணிகளை முழுமையாக முடித்துள்ளனர். பணிகள் விரைந்து முடிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in