சட்டப்பேரவைத் தொகுதியில் பணிபுரிய குலுக்கல் முறையில் அலுவலர்கள் தேர்வு :
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் எந்த சட்டப்பேரவைத் தொகுதியில் பணிபுரிய உள்ளார்கள் என்பது கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் என தலா 2,049 அலுவலர்கள் 20 சதவீத கூடுதல் அலுவலர்கள் சேர்த்து 2,458 பேர் என மொத்தம் 9,832 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இதற்காக சம்பந்தப்பட்ட பணியாளரின் விவரங்கள், அவரின் சொந்த ஊர் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி, அவர் தற்போது பணிபுரிந்து வரும் அலுவலகம் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி ஆகிய விவரங்கள் கணினியில் உள்ளீடு செய்து கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை 1, 2, 3 ஆகிய பணியிடத்துக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு முதல்கட்டமாக கடந்த 14-ம் தேதி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
தொடர்ந்து வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் எந்த தொகுதியில் பணிபுரிய உள்ளனர் என்பதை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் எந்த சட்டப்பேரவை தொகுதியில் பணியாற்ற உள்ளார்கள் என்பதை பொது பார்வையாளர்கள் பி.ஏ.ஷோபா, நவ்ஜட்பால்சிங் ரன்த்வானா ஆகியோர் பார்வையிட்டனர்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சி.சித்ரா, (கணக்குகள்) பொ.நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
