தேர்தல் சிறப்பு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் : தி.மலை மாவட்ட ஆட்சியருக்கு கிராம உதவியாளர்கள் கோரிக்கை

தேர்தல் சிறப்பு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் :  தி.மலை மாவட்ட ஆட்சியருக்கு கிராம உதவியாளர்கள் கோரிக்கை
Updated on
1 min read

தேர்தல் பணியில் ஈடுபடும் கிராம உதவியாளர்களுக்கு, தேர்தல் சிறப்பு ஊதியத்தை ஒரு மாத ஊதியமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நேற்று அளித்துள்ள மனுவில், “தேர்தல் காலத்தில் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பான இடத்துக்கு மீண்டும் கொண்டு செல்லும் வரை இரவு, பகல் பாராமல் பணி செய்கிறோம். ஆனால், தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 15 ஆயிரம் கிராம உதவியாளர்களுக்கு தேர்தல் சிறப்பு படி வழங்குவதில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பு ஊதியமாக, அடிப்படை ஊதியத்தில் இருந்து 15 நாள் ஊதியம் வழங்க உத்தரவிட்டும், பல மாவட்டங்களில் முறையாக வழங்கப்படவில்லை. மேலும் சிறப்பு ஊதியத்தை, 15 நாள் என்பதை உயர்த்தி, ஒரு மாத ஊதியமாக வழங்க வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, அன்று மாலையே ஊதியம் வழங்குவது போல், கிராம உதவி யாளர்களுக்கு வழங்கப் படுவது இல்லை. ஊதியம் பெற அலைக்கழிக்கப்படுகிறோம். எனவே, வாக்குப்பதிவு மையத்திலேயே கிராம உதவியாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குச்சாவடி பராமரிப்பு பணியில், கிராம நிர்வாக அலுவலர் இல்லாத வாக்குச்சாவடிகளில் கிராம உதவியாளர்கள்தான் பணியாற்றுகின்றனர். பராமரிப்பு செலவையும் கிராம உதவியாளர்களே பார்க்கும் நிலைஉள்ளது. ஆனால், எங்களுக்கு செலவுத் தொகைவழங்குவது கிடையாது. செலவுத் தொகையை முறையாக செலவு செய்ய கிராம உதவியாளர்களுக்கு வழங்க நடிவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்து, தேர்தல் பணியில் கிராம உதவியாளர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற உதவி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in