

வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பியை ஆதரித்து, வேப்பனப்பள்ளியில் தமிழக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசியதாவது: வேப்பனப்பள்ளி பகுதியில் காய்கறி, மலர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். உங்களுக்காக ஓசூரில் ரூ.20கோடியில் சர்வதேச மலர் ஏற்றுமதி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு மலர்களை நீங்கள் விற்பனை செய்து உடனே பணம் பெறலாம். இதன் அருகில் 20 ஏக்கரில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய பிரமாண்டமான சந்தை (மார்க்கெட்) கட்டித் தரப்படும். இங்கு காய்கறி, பழங்களுக்கான உரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கும். விலை குறையும் போது விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை அங்கு கட்டப்படும் குளிர்பதன கிடங்கில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். விலை உயரும்போது பொருட்களை விற்றுக் கொள்ளலாம். விவசாயிகளுக்காக ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும். இப்பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளீர்கள். விவசாயி களான உங்களின் கஷ்டங்கள் விவசாயியான என்னைப் போன்ற ஒரு முதல்வருக்கு தான் தெரியும். இந்த தொகுதியில் போட்டியிடும் கே.பி.முனுசாமியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். கே.பி.முனுசாமிஅரசியல் அனுபவம் மிக்கவர். அவர் வெற்றி பெற்றால் வேப்பனப்பள்ளி தொகுதி செழிக்கும் என்றார்.