

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், 1974-ம் ஆண்டு முதல் சரக்கு, பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின், கடந்த 2011-ம் ஆண்டு முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
மன்னார்குடியிலிருந்து சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்க மத்திய ரயில்வே அனுமதி அளித்த நிலையில், 47 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மன்னார்குடி ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்கும் வகையில், மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களிலிருந்து 159 லாரிகளின் மூலம் கொண்டு வரப்பட்ட 2,000 டன் நெல் மூட்டை களை சரக்கு ரயிலில் உள்ள 59 வேகன்களில் ஏற்றும் பணி தொடங்கியது. இந்த சரக்கு ரயிலில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகள் அரைவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
சரக்கு ரயிலில் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்கு முன்பாக நடைபெற்ற பூஜையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக போக்குவரத்து பொதுமேலாளர் ராஜ்குமார், திருச்சி கோட்ட இயக்க மேலாளர் ஹரிகுமார், மன்னார்குடி ரயில் நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் சுமைப்பணி தொழிலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.