

தூத்துக்குடி அருகே வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப் பட்ட 7 கிலோ தங்க நகைகள் உரிய ஆவணங்கள் இருந்ததால் விடுவிக்கப்பட்டன. நகைகளுக்கு பாதுகாப்பாக வந்த முன்னாள் ராணுவ வீரர் முறையான அனுமதி இல்லாமல் துப்பாக்கியை வைத்திருந்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் புதுக்கோட்டை அருகே உள்ள சுங்கச்சாவடி முன்பு தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற வேனை பறக்கும் படையினர் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அதில் 7 கிலோ தங்க நகைகள் இருந்தன. வேனில் பாதுகாப்புக்காக வந்திருந்த மதுரை மேலூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மனுவேந்தி என்பவர் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தேர்தலையொட்டி துப்பா க்கியை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அதிலிருந்து விலக்கு பெற வேண்டுமானால் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், மனுவேந்தி முறையான எந்த அனுமதியும் இல்லாமல் துப்பாக்கியை தன்வசம் வைத்துள்ளார்.
இது தொடர்பாக பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் காளிராஜ் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மனுவேந்தியை எஸ்ஐ இம்மானுவேல் ஜெய சீலன் கைது செய்தார். 7 கிலோ தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் அவை விடுவிக்கப்பட்டன.