முதியோருக்கு உணவும், உடற்பயிற்சியும் இரு கண்கள் : முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் ஆலோசனை

ஈரோட்டில் நேற்று நடந்த சக்திதேவி அறக்கட்டளையின் ஐம்பெரும் விழாவில், முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதினை மத்திய கலால் மற்றும் சேவைவரித்துறை முன்னாள் தலைமை ஆணையர் சி.ராஜேந்திரன் வழங்கினார். அருகில், சக்திமசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி உள்ளிட்டோர் உள்ளனர்.
ஈரோட்டில் நேற்று நடந்த சக்திதேவி அறக்கட்டளையின் ஐம்பெரும் விழாவில், முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதினை மத்திய கலால் மற்றும் சேவைவரித்துறை முன்னாள் தலைமை ஆணையர் சி.ராஜேந்திரன் வழங்கினார். அருகில், சக்திமசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி உள்ளிட்டோர் உள்ளனர்.
Updated on
1 min read

முதியோருக்கு உணவும், உடற்பயிற்சியும் இரு கண்கள் போன்ற வையாகும் என முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் பேசினார்.

சக்திமசாலா நிறுவனங்களின் ஒரு அங்கமான சக்திதேவி அறக் கட்டளையின் 21-வது ஐம்பெரும் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. விழாவில், மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை புரிந்து வரும் முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது. விழாவில் ஏற்புரையாற்றி மருத்துவர் வி.எஸ்.நடராஜன் பேசியதாவது:

முதுமையில் நலமாக வாழ 100 வழிகள் என்ற எனது குறுநூலில், கடந்த 40 ஆண்டுகளாக நான் பெற்ற அனுபவங்களை எழுதியுள்ளேன். முதுமை என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு பருவம். இதனை முதியோர் உணர்ந்து கொள்ள வேண்டும். முதியோர் கீழே விழுவது என்பது கொடுமையான செயல். கீழே விழுந்தால் மரணம் கூட ஏற்படலாம். எலும்புமுறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகவும் இருக்க நேரலாம். இதைத் தடுக்க குறும்படம் எடுத்து, நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெளியிட்டு வருகிறேன்.

முதுமையில் பல நோய்கள் எவ்வித அறிகுறியும் இல்லாமல் மறைந்து இருக்கும். எனவே, காலமுறைப்படி மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதோடு, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். முதியோருக்கு உணவும், உடற்பயிற்சியும் இரு கண்கள் போன்றவையாகும்.

தமிழகத்தில் எல்லா முதியவர்களுக்கும், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும் இலவசமாக நிமோனியா தடுப்பூசி போட வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் இலவசமாக தடுப்பூசி போட உத்தரவிட்டது. சென்னை அரசு கல்லூரி மருத்துவமனையில் முதியோர் பிரிவில் இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடப் படுகிறது. ஈரோட்டில் காசியண்ண கவுண்டர் மருத்துவமனையில் எங்களது அறக்கட்டளை சார்பில்,சிகிச்சைப் பிரிவு தொடங்கப் பட்டுள்ளது. முதுமை நோய்கள் வருவதைக் கட்டுப்படுத்தா விட்டால் இயலாமையும், ஊனமும் ஏற்படும். இதன் மூலம் மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதைத் தடுக்க எங்களது அறக் கட்டளை செயல்பட்டு வருகிறது.

பொதுவாக, 70 வயதைக் கடந்த முதியோர் கீழே விழுந்து விடாமல் இருக்கும் வகையிலான பயிற்சியை அளிக்கும் மையம் தேவையாக உள்ளது. அதனை சக்திதேவி அறக்கட்டளையினர் தொடங்க வேண்டும்.

முதியோருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும் இதுபோன்ற மையங்கள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும். இது போன்ற மையம் தொடங்கப்பட்டால் மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோரை நான் வழங்கவும் தயாராக உள்ளேன், என்றார்.

விழாவில், சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in