வாக்காளர்களுக்கு வெகுமதி வழங்கினால் நடவடிக்கை : தேர்தல் பார்வையாளர்கள் எச்சரிக்கை

தூத்துக்குடியில் தேர்தல்  விதிமுறைகள் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள்  மற்றும் வேட்பாளர் பிரதிநிதிகள், அலுவலர்கள் பங்கேற்ற   ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  				     படம்: என்.ராஜேஷ்.
தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர் பிரதிநிதிகள், அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. படம்: என்.ராஜேஷ்.
Updated on
1 min read

‘‘வாக்காளர்களுக்கு பணம், மது, பரிசு பொருட்கள் உள்ளிட்ட எந்தவொரு வெகுமதிகளையும் வழங்கக்கூடாது. வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் சட்டப்பேரவை தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள், அலுவலர்களுடன் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் அஸ்வானி குமார் சவுதாரி, ஜுஜவரப்பு பாலாஜி, சுஷில் குமார் படேல், சவின் பன்சால் அனில்குமார், தேர்தல் காவல் பார்வையாளர் சப்ய சாஷி ராமன் மிஸ்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் குண்டன் யாதவ், ராகேஷ் தீபக், சுரேந்திர குமார் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் பார்வையாளர்கள் கூறும்போது, ‘‘தேர்தலின்போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்துக்கும் முறையாக அனுமதி பெற வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், மது, பரிசுபொருட்கள் உள்ளிட்ட எந்தவொரு வெகுமதிகளையும் வழங்கக்கூடாது. வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் தேர்தல் பார்வையாளர்களின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு வேட்பாளரும் தனியாக வங்கிக் கணக்கு தொடங்கி அதன்மூலமே செலவுகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் தேர்தல் செலவு கணக்கை கணக்கு அலுவலர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு வேட்பாளர்களும் செலவு கணக்கை 3 முறை செலவு கணக்கு குழுவிடம் ஒப்பளிப்பு செய்ய வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட உள்ள விவரங்கள் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரியப்படுத்தப்படும், எனத் தெரிவித்தனர்.

கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in