

பெட்ரோல் டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்துவேன் என்ற உறுதிமொழியுடன் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சேலம் பள்ளப்பட்டி துரைசாமி நகரைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி கார்த்திகேயன். தனியார் நிறுவன மேலாளர். தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட தலைவர். பெட்ரோல், டீசல் பாட்டிலை கழுத்தில் மாலையாக அணிந்தபடி வந்து , சேலம் மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து அவர் கூறும் போது, ‘பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால், அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் என்னை பொதுமக்கள் தேர்ந்தெடுத்தால், பெட்ரோல், டீசல் விலையை குறைத்து, அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறாமல் தடுத்து நிறுத்துவேன் என்ற உறுதியை அளிக்கும் வகையில், பெட்ரோல், டீசலை கழுத்தில் மாலையாக அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தேன்,’ என்றார்.
கூலி தொழிலாளிக்கு சம்பளம்
சேலம் வித்யாநகர் சோழன் மேற்கு தெருவைச் சேர்ந்த பிஸ்மில்லா கட்சியின் நிறுவனர் வழக்கறிஞர் அகமது ஷாஜஹான், சேலம் வடக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து பிளக்ஸ் பேனரை கையில் பிடித்தபடி ஆதரவாளர்களுடன் வந்தார்.
இதுகுறித்து அகமது ஷாஜஹான் கூறும்போது, ‘அரசு, தனியார், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது.
ஆனால், தினக்கூலிக்கு செல்லும் ஏழைகளுக்கு தேர்தல் வாக்குபதிவு நாளில் சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிளக்ஸ் போர்டுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்,’ என்றார்.