

தூத்துக்குடி மாவட்டத்தில் கடைசி நாளான நேற்று 85 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 6 தொகுதிகளிலும் மொத்தம் 180 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக, காங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டனர்.
மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று தூத்துக்குடி தொகுதியில் அமமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் உ.சந்திரன் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிம்ரோன் ஜித் சிங் கலோனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மகன் உதய தினேஷ் மனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி தொகுதியில் நேற்று 15 பேர் உட்பட இதுவரை 30 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல் விளாத்திகுளம் தொகுதி சமக வேட்பாளர் எம்.எக்ஸ்.வில்சன் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிமிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். விளாத்திகுளம் தொகுதியில் நேற்று 7 பேர் உட்பட இதுவரை 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
திருச்செந்தூர் தொகுதியில் கடைசி நாளான நேற்று 20 பேர் உட்பட இதுவரை 32 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வைகுண்டம் தொகுதியில் நேற்று 15 பேர் உட்பட இதுவரை 31 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 26 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கோவில்பட்டி தொகுதியில் நேற்று 21 பேர் உட்பட இதுவரை 38 பேர் வேட்புமனுதாக்கல் செய் துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 6 தொகுதிகளிலும் நேற்று மட்டும் 85 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 180 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று (மார்ச் 20) நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 22-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.