கொல்லிமலை சுற்றுலா பயணிகளிடம் தீ தடுப்பு விழிப்புணர்வு :
நாமக்கல் உட்பட 3 மாவட்ட எல்லையில் கொல்லிமலை அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வனத்துறை சார்பில் வனப்பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்ஒரு பகுதியாக கொல்லி மலைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கொல்லிமலை அடிவாரமான காரவள்ளி சோதனைச்சாவடியில் நாமக்கல் வனச்சரகர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் மலைக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் தீ தடுப்பு, தீ எச்சரிக்கை விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வனத்தில் வறட்சி நிலவுவதால் மரங்களில் இருந்து இலைகள் உதிர்ந்துள்ளன.
எனவே எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்லக்கூடாது, புகைபிடிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும், என தெரிவித்தனர்.
