

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளரான அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை அரவக்குறிச்சி பாஜக தேர்தல் பணிமனையிலிருந்து கூட்டணி கட்சியினருடன் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சைக்கிளில் நேற்று ஊர்வலமாக வந்து தேர்தல் அலுவலர் தவச்செல்வனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியது: 2016 தேர்தலில் இங்கு வெற்றி பெற்ற ஒருவர் தற்போது கரூர் தொகுதிக்கு ஓடி விட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். செந்தில்பாலாஜி தோல்வி பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார். அராஜகமாக பேசுவது, போலீஸாரை மிரட்டுவது, மணல் அள்ளச் சொல்வேன் என்பதெல்லாம் அராஜகம் என்றார்.