

பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் இரு கல் குவாரிகளில் ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்களை முறையாக பராமரிக்கவில்லை எனக்கூறி 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (35). இவர், கோடங்கிபாளையம் பிரிவில் வைத்துள்ள கல் குவாரியில் பல்லடம் போலீஸார் ஆய்வு செய்தனர். இதில், 75 கிலோ எடை கொண்ட 600 ஜெலட்டின் குச்சிகள், 265 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ராஜேஷ்குமார் மீது பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
இதேபோல கோடங்கிபாளையத்தில் உள்ள சண்முகம் என்பவரது கல்குவாரியில் போலீஸார் ஆய்வு செய்ததில், வெடிபொருட்களை முறையாக பராமரிக்காதது தெரியவந்தது. இதையடுத்து சண்முகம், அவரது மகன் பாலகுமார் (33), ஊழியர்கள் கவுதம் (19), பத்மாலட்சன் (26) மற்றும் சக்திவேல் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில் சண்முகம் தவிர, 4 பேரை, பல்லடம் போலீஸார் கைது செய்தனர். மேலும் குவாரியில் இருந்து 49 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர் மற்றும் 186 ஜெலட்டின் குச்சிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.