

மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் குடும்ப சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.52 கோடி அதிகரித்துள்ளது. 2006-ல் 9.08 கோடியாக இருந்த சொத்து மதிப்பு, தற்போது ரூ.61.44 கோடியாக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் மாநில மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.எஸ்.தண்டாயுதபாணியிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவரது, வேட்புமனு தாக்கலின் போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட் டப்பட்ட சொத்து விவரம்: விஜய பாஸ்கரின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.29 கோடியே 77 லட்சத்து 3 ஆயிரத்து 890 மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 94 லட்சத்து 7 ஆயிரத்து 984 என மொத்தம் ரூ.37 கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 874 ஆகும்.
மனைவி ரம்யா பெயரில் உள்ள அசையும் சொத்து மதிப்பு ரூ.6 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரத்து 800 மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 63 லட்சத்து 87 ஆயிரத்து 652 என மொத்தம் ரூ.22 கோடியே 58 லட்சத்து 93 ஆயிரத்து 452 ஆகும்.
மேலும், தனது 2 மகள்களின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து 9 ஆயிரத்து 563 ஆகும் என இவர்களின் குடும்ப அசையும் மற்றும் அசையா சொத்தின் மொத்த மதிப்பு ரூ.61,44,14,889 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ல் நடைபெற்ற தேர்தலின்போது அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அசையும் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 52 லட்சத்து 81 ஆயிரத்து 94 ஆகவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 55 லட்சமாகவும் இருந்தது. மேலும், அவரது மனைவி ரம்யா பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 71 லட்சத்து 51 ஆயிரத்து 234 மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இவர்களது 2 மகள்களின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் என அப்போது இவர்களது குடும்ப சொத்து மதிப்பு ரூ.9,08,77,328 ஆக இருந்தது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் இவர்களது குடும்ப சொத்து மதிப்பு ரூ.52 கோடியே 35 லட்சத்து 37 ஆயிரத்து 561 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா பெயரில் கடந்த 2016-ல் கடன் மதிப்பு ரூ.16.71 கோடி எனவும், 2021-ல் கடன் மதிப்பு ரூ.9.91 கோடி எனவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.