100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி - திருநங்கைகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி :

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து திருநங்கைகளுக்கு ஆட்சியர் செந்தில் ராஜ் செயல்முறை விளக்கம் அளித்தார். 	       படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து திருநங்கைகளுக்கு ஆட்சியர் செந்தில் ராஜ் செயல்முறை விளக்கம் அளித்தார். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருநங்கைகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், வஉசி கல்லூரி நிர்வாகம் மற்றும் மந்திதோப்பு பகுதியில் உள்ள திருநங்கைகள் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். மாவட்ட தேர்தல் அதிகாரி ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்தும், வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் வாக்களித்ததை சரிபார்ப்பது குறித்தும் திருநங்கைகளுக்கு ஆட்சியர் செயல் முறை விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திருநங்கைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது, ‘‘ சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்று வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் தேர்தலில் மனசாட்சிப்படி ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருள் வாங்காமல் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க வேண்டும். நமது ஓட்டு, நமது உரிமை. அந்த உரிமையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது’’ என்றார்.

நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஸ்குமார், வஉசி கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு, வட்டாட்சியர் ஜஸ்டின், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன் மற்றும் கல்லூரி மாணவர்கள், மந்திதோப்பு திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

மனசாட்சிப்படி ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருள் வாங்காமல் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in