Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM
``மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நிலுவையில் இருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே 8 முறைபோட்டியிட்டுள்ள பொன்ராதாகிருஷ்ணன் நேற்று 9-வது முறையாக மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக அவர், நாகர்கோவில் வடசேரியில் அண்ணா சிலை, அம்பேத்கர் சிலை, ஜீவா சிலை, வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலை, மணிமேடையில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சிலை, அண்ணா பேருந்து நிலையம் முன்புள்ள மார்ஷல் நேசமணி சிலைஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், பாஜக மாவட்ட அலுவலகத்தில் இருந்து தாமரைப்பூ மாலை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். வேட்புமனு தாக்கலின்போது பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ், அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.அசோகன், நாகர்கோவில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி மற்றும் பாஜகவினர் திரளானோர் பங்கேற்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்தபின், பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நிலுவையில் இருக்கும் நான்குவழிச்சாலை, இரட்டை ரயில்பாதைபோன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். ஆசாரிபள்ளம் அரசுமருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்படும். ரப்பர்பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும்.
என்னால் திறக்கப்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலம் ஆடுகிறது என, 2019 மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் மற்றும் திமுகவினர் பொய்பிரச்சாரம் செய்தனர். அந்த தேர்தல் முடிந்ததும் பாலம் ஆடுவது நின்றுவிட்டதா? இதன் பின்னணியிலும், துறைமுக திட்டத்தின் பின்னாலும் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சதி இருக்கிறது. 2019-ல் ஏமாந்து விட்டோம் என குமரி மாவட்ட மக்கள் கூறுகிறார்கள். இதனால், தற்போது பாஜக கூட்டணி அமோக வெற்றிபெறும், என்றார்.
வேட்புமனுவில் பொன் ராதாகிருஷ்ணனின் அசையும் சொத்து மதிப்பு ரூ.50.11 லட்சம் எனவும், அசையா சொத்து மதிப்பு ரூ. 7 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குமரியில் 4 பேர் வேட்புமனு தாக்கல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை இடைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கு இதுவரை வேட்புமனு தாக்கல் வேகம் பிடிக்கவில்லை.
மனு தாக்கல் தொடங்கி 3-வது நாளான நேற்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், சுயேச்சை வேட்பாளர் நாகூர் மீரான் பீர்முகமது ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பத்மநாபபுரம் மற்றும் குளச்சல் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா ஒருவர் வீதம் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று 4 பேர் மட்டுமே மாவட்டம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 3 நாட்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT