இ.கம்யூ. தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு இடம்பெறும் : திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் கருத்து

இ.கம்யூ. தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு இடம்பெறும் :  திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் கருத்து
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினரும், திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.சுப்பராயன், திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முறைகேடுகளை முறையாக்கும் அதிமுகவையும், இந்திய பண்பாட்டு மூலங்களை அழித்தும், இந்துக்களிடையே வேற்றுமையை விதைக்கும் பாஜகவையும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிப்போம்.

தமிழகத்தில் பல வருத்தங்களுக்கு இடையிலும், நெருக்கடிகளுக்கு இடையிலும், ஆர்.எஸ்.எஸ்-ஆல் வழிநடத்தப்படும் பாஜகவை வீழ்த்தவும் இந்த தேர்தல் அரசியலில் திமுக அணியில் இடதுசாரி கட்சிகள் இடம்பிடித்துள்ளன.

பல வருத்தங்கள் இருந்தாலும், அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அதனை பொருட்படுத்தவில்லை. இடதுசாரிகள், கொள்கை அடிப்படையில் கட்சி நடத்துபவர்கள். சில இழப்புகள் ஏற்பட்டாலும், அது கூட்டணியின் வெற்றியை பாதிக்காது.

பாஜக-அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்தும் அரசியல் யுக்திகளை அவர்கள் கையாள்கிறார்கள். அதனை திமுக தலைமையிலான கூட்டணி முறியடிக்கும். 200 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் போட்டியிடும் பாஜக டெபாசிட் வாங்குவதே கடினம். அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வசீகரமான வாக்குறுதியை யாரும் நம்பமாட்டார்கள். அது வெறும் காகித அறிக்கைதான். எங்கள் தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு இடம்பெறும்.

மக்களை மதுவில் ஆழ்த்தி, அதன்மூலமாக வருவாய் ஈட்டுவது பொறுப்பான நிர்வாகம் இல்லை. வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்துக்கு காரணம். மத்திய அரசின் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in