

நீலகிரி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டு, இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாதெரிவித்துள்ளார். இதுகுறித்துஅவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா தொற்றின் காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் (சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் இதர நாள்பட்ட நோய்கள்) உள்ளவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதாரத் துறை மூலமாக கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் விலையில்லாமல் தடுப்பூசி போடப்படுகிறது.
உதகை எஸ்எம் மருத்துவமனை, விஜயா மருத்துவமனை, சிவசக்தி மருத்துவமனை, பார்வதி நர்சிங் ஹோம், குன்னூர் நன்கெம் மருத்துவமனை, சகாய மாதா மருத்துவமனை, புஷ்பா மருத்துவமனை, எடப்பள்ளி சித்தகிரி சாய் மருத்துவமனை, கேஎம்எஃப் மருத்துவமனை, எஃப்எஃப் மருத்துவமனை, கூடலூர் அஸ்வினி அக்காடு மருத்துவமனை, புஷ்பகிரி மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆதார், வங்கிக் கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.