

சங்ககிரி அருகே கூலிப்படையை ஏவி மகனை கொலை செய்த தந்தை உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சங்ககிரி அடுத்த உப்புபாளையம் நாயங்காட்டைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து (71). இவரது மகன் சேகர் (45). விவசாயியான இவர் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். கடந்த 3-ம் தேதி சேகர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.
இதுதொடர்பாக சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சேகர் இரும்பு பைப்பால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், சொத்து பிரச்சினையில், சேகரை அவரது தந்தையே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிந்தது.
இதையடுத்து, நாச்சிமுத்து மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த சதீஷ் (30), பிரவீன் (22), சக்தி (27), பிரகாஷ்ராஜ் (24) ஆகியோரை போலீஸார் கைது செய்து, சங்ககிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பூபதி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.