

பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வந்த ரூ.11,25,705-ஐ தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர், துறைமங்கலம் நான்கு சாலை பகுதியில் வட்ட வழங்கல் அலுவலர் பெரியண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே தனியார் பெட்ரோல் பங்க் ஊழியரான பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜ்(45) வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில், அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.11,25,705 ரொக்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதை பெரம்பலூர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர்- திருமழபாடி பிரிவு சாலையில் வந்த தனியார் மசாலா நிறுவன வாகனத்தை தேர்தல் பறக்கும் படை மண்டல துணை வட்டாட்சியர் மனோகர் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். இதில், அந்த வாகனத்தில் ஆவணமின்றி இருந்த ரூ.60,300 ரொக்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், அதை அரியலூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.