

சேலத்தில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புடைய 22 தங்க மோதிரங்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சேலம் மரவனேரியில், நேற்று முன்தினம் நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடம் சோதனை நடத்தினர். அவர் 22 தங்க மோதிரங்களை உரிய ஆவணங்கள் ஏதுமின்றி வைத்திருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து, மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்புடைய 22 மோதிரங்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிவதாபுரத்தை அடுத்த பனங்காட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தணிக்கை மேற்கொண்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து சோதனையிட்டனர்.
சிவதாபுரத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரிடம் வெள்ளிக் கொலுசு மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு உற்பத்திக்குப் பயன்படும் 10 கிலோ வெள்ளிக் கம்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லாததை அடுத்து, ரூ.3.50 லட்சம் மதிப்புடைய வெள்ளிக் கம்பிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையில் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ 3.72 லட்சம், கோபியில் ரூ 2.16 லட்சம், பவானிசாகரில் ரூ 7.16 லட்சம் என மொத்தம் ரூ 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி, ஓசூரில் சோதனை
தளி சட்டப்பேரவைத்தொகுதிக் குட்பட்ட கெலமங்கலம் கூட்டு ரோடு அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகனத்தணிக்கையில், காரில் வந்த கெலமங்கலம் கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தமுனிராஜ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.2லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.