

போச்சம்பள்ளி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் ரேஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பாரண்டப்பள்ளி சிப்காட் பகுதியில் புளியம்பட்டி முல்லை நகரைச் சேர்ந்த முரளி (42) என்பவருக்குச் சொந்தமான பழைய நிறுவனத்தின் குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டிக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில், போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர் ரகமதுல்லா, கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகர், சென்னகிருஷ்ணன் ஆகியோர் சிப்காட் பகுதிக்குச் சென்றனர். குடோன் பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டனர். அதில் 150 சிப்பங்களில் சுமார் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் 10 சிப்பம் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்த அதிகாரிகள், கிருஷ்ணகிரியில் உள்ள உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக அலு வலர்கள் கூறும்போது, பொது மக்களிடையே குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை பாலிஷ் செய்து ஓட்டல் மற்றும் அரிசி மண்டிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும், வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் கடத்தியதும் தெரியவந்துள்ளது.
தலைமறைவாக உள்ள முரளியை தேடி வருகிறோம்,’’ என்றனர்.