

நீர்வரத்து முற்றிலும் நின்றதாலும், வெயிலின் தாக்கம் அதிகரிப்பாலும், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 45.15 அடியாக சரிந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை பொறுத்து, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
இந்நிலையில் கடந்த 1-ம் தேதி முதல் கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து முற்றிலும் நின்றது. அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்காக வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் தற்போது தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 45.15 அடிக்கு மட்டும் தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 149 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் நாள்தோறும் 19 கனஅடி நீர் ஆவியாகிறது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.