

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயிலில் நேற்று நடந்த மயான சூறைத் திருவிழாவில் பக்தர்கள் காளி வேடமணிந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயில் மயான சூறைத் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 12-ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு சக்தி கரகம், அக்னி கரகம், கங்கையில் நீராடிவிட்டு கோயிலுக்கு வருதல். மயானத்துக்கு முகவெட்டு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று மயானசூறைத் திருவிழாவை முன்னிட்டு காலை 5.30 மணி முதல் பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு வேண்டுதல் நிறைவேற்றினர். பக்தர்கள் 50 அடி வரை அலகு குத்தியும், உடலில் எலுமிச்சைப் பழங்களைக் குத்திக் கொண்டும், காளி வேடம் அணிந்தும் வேண்டுதல் நிறைவேற்றினர்.
மதியம் அங்காளம்மன் பூத வாகனத்தில் மயான சூறைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. வழியில் இருந்த பக்தர்கள் தேர் மீது உப்பு மற்றும் மிளகு தூவி வேண்டுதல் நிறைவேற்றினர். பின்னர் அம்மன் தேர் நகரில் ஊர்வலமாக சென்று நேதாஜி சாலையில் நின்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
தருமபுரி
அதைப்போலவே, கடைவீதி, வெளிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஏற்றிச் செல்லப்பட்ட அம்மன் தருமபுரி நகராட்சி தகன மையம் அருகிலுள்ள மயானத்தில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஒட்டி நேற்று முன் தினம் 3 கோயில்கள் சார்பிலும் பால் குட ஊர்வலம் நடத்தப்பட்டது.