திண்ணை பிரச்சாரம் மூலம் பெண்களிடம் வாக்கு சேகரியுங்கள் : அறிமுக கூட்டத்தில் பாமக வேட்பாளர் வேண்டுகோள்

திண்ணை பிரச்சாரம் மூலம் பெண்களிடம் வாக்கு சேகரியுங்கள் :  அறிமுக கூட்டத்தில் பாமக வேட்பாளர் வேண்டுகோள்
Updated on
1 min read

திருப்போரூரை அடுத்த மாம்பாக்கத்தில் பாமகவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திண்ணை பிரச்சாரம் மூலம் நூறு நாள் பணியாளர்கள் மற்றும் பெண்களிடம் வாக்கு சேகரியுங்கள் என பாமக வேட்பாளர் ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளராக அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் திருக்கச்சூர் ஆறுமுகம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பாமகவினர் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில், முதல்கட்டமாக பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்திக்கும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், மாம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், பாமகவின் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பாமகவின் வேட்பாளர் ஆறுமுகம் பேசியதாவது: இந்த சட்டப்பேரவைத் தேர்தல் மற்ற சட்டப்பேரவைத் தேர்தலை விட சற்று வித்தியாசமானதாக இருக்கும். அதனால், தமிழக அரசின் சாதனைகளை கிராமங்கள்தோறும் சென்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும்.

மேலும், ஏரி வேலையில் உள்ள பெண்களிடம் பாமகவின் தேர்தல் அறிக்கை மற்றும் அதிமுக அரசின் விவசாய திட்டங்களை விளக்கி வாக்கு சேகரிக்க வேண்டும்.

முக்கியமாக பெண்களின் வாக்குகளை சேகரிக்கும் வகையில், பாமகவினர் திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும். திண்ணை பிரச்சாரத்தின் மூலம் பெண்களின் வாக்குகளை நிச்சயம் நாம் பெற முடியும். இதன்மூலம், பாமகவின் வாக்கு வங்கியையும் நாம் அதிகரிக்க முடியும். அதனால், பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கிராமப் பகுதிகளில் திண்ணை பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், பாமகவின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் ஏழுமலை, மேற்கு ஒன்றிய செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in