Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM
காவேரிப்பட்டணம் அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் கோயில் மயான சூறை திருவிழா நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் கோயில் மயான சூறை தேர் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை முகவெட்டு எடுத்து ஆற்றங்கரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. காலை 5 மணி முதலே பக்தர்கள் அலகு குத்தியும், உடல் முழுவதும் எலுமிச்சை பழங்கள் குத்தியபடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் காளி வேடமணிந்து வந்தனர்.
பிற்பகலில் அம்மன் மயான சூறை ரதம் கோயிலில் இருந்து நகர்வலம் புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் ஊர்வலமாகப் புறப்பட்டு, காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது வீதியின் இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள், அம்மன் தரிசனம் செய்தனர். 100 அடி தூரத்துக்கு பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி வந்து அம்மனுக்கு தீபாராதனை மற்றும் மலர் தூவி வழிபாடு நடத்தினர். பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி குழந்தைகளை தூக்கி வந்து அம்மனை வழி பட்டனர். இதனைத் தொடர்ந்து அம்மன் தேர் தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தைக் கடந்து ஆற்றங்கரையைச் சென்றடைந்தது.
தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தில் ஏராளமானபக்தர்கள் குவிந்திருந்ததால் இவ்வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் காவேரிப்பட்டணம் நகருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இவ்விழாவில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர். அசம்பாவித நிகழ்வுகளைத் தடுக்கும் பொருட்டு எஸ்பி பண்டி கங்காதர் உத்தரவின் பேரில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT